வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியது. அதிதீவிர புயலாக நேற்று மாறிய நிவர். நள்ளிரவில் புதுவை அருகே கரையை கடந்தது.
இதனால் நேற்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய நாகப்பட்டினம் முதல் சென்னை வரை மிகமிக கனமழை பெய்தது. தாம்பரம், புதுச்சேரி, கடலூரில் அதிகபட்சமாக பெய்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்த காரணத்தால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, கொருக்குப் பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. வளசரவாக்கம் பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர். மழை நின்றுவிட்டதால் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரினர்.
மொத்தமாக சென்னையில் மின் இணைப்பு 390 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நீர் மெல்ல மெல்ல சென்னையில் வடிய தொடங்கி உள்ளதால் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது. இந்நிலையில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக சென்னையில் எல்லா இடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.