சென்னை: திடீரென பாஜகவின் எஸ்வி சேகர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வந்தது பெரும் பரபரப்பை நேற்று ஏற்படுத்திவிட்டது.
நேற்றைய தினம் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியின் பிறந்த நாள்... தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம், நிவாரண பணிகளை வழங்குகள் என்று தன்னுடைய தொண்டர்கள், ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டிருந்தார்.
எனினும் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும், நிவாரண, உதவி பொருட்களையும், பரிசு பொருட்களையும் தந்து மக்களை குஷிப்படுத்திவிட்டனர்.
இந்நிலையில்தான் திடீரென எஸ்வி சேகர் உதயநிதியை சந்திக்க வந்துவிட்டார்.. சமீப காலமாக தமிழக அரசியலில் திமுகவை அதிகமாக விமர்சித்து வந்தது எஸ்வி சேகர்தான்.. தினமும் வீடியோ வெளியிட்டு, திமுகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதும் எஸ்வி சேகர்தான்.
பாஜக மேடைகளில் திராவிடர் கட்சிகைளை அதிகம் விமர்சித்து பேசியதும் எஸ்வி சேகர்தான்.. அவ்வளவு ஏன், ஒருமுறை, "திமுக கொள்கை ரீதியாகத்தான் பிராமணர்களுக்கு எதிராக உள்ளது... ஆனால் ஒருபோதும் அவர்கள் பிராமணர்களை வெறுத்ததில்லை. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் ஆலோசகர்கள் அனைவருமே பிராமணர்கள்தான். உண்மையில் பிராமணர்களை மதிக்கும் கட்சி திமுக என்று கிண்டலாகவும் கூறியவர்.
இந்நிலையில்தான், உதயநிதியின் வீட்டுக்கு வந்திருந்தார் எஸ்வி சேகர்.. அப்போது அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.. இப்படி எஸ்விசேகர் உதயநிதியை சந்திக்க வருவார் என்று அங்கிருந்தோர் யாருமே எதிர்பார்க்கவில்லை.. அவரது வாழ்த்து பலரது புருவங்களையும் உயர்த்தியது... அத்துடன் பல தரப்பினருக்கும் குழப்பத்தையும் சேர்த்து விளைவித்தது.
சோஷியல் மீடியா முழுவதும் நேற்று மாலை முதல், உதயநிதி ஸ்டாலினுக்கு எஸ்வி சேகர் சொன்ன வாழ்த்து செய்திதான் பதிவாகி இருந்தது.. இதையடுத்து, உதயநிதிக்கு வாழ்த்து சொன்னது குறித்து எஸ்வி சேகரே விளக்கம் தந்திருந்தார்.. "தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலினை சந்திக்க சென்றார்கள்.
அவர்களுடன் நானும் சென்றேன்.. அங்கே சென்ற பிறகுதான் உதயநிதிக்கு பிறந்த நாள் என்று தெரிய வந்தது. அதனால், அவரை வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். அவருடைய படம் ஒன்றிலும் நடிக்கிறேன். அந்த படத்தின் நாயகனுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நண்பர்கள், யாரும் எதிரியல்ல" என்றார். வழக்கமாக அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை என்ற வாதத்தையே எஸ்வி சேகரும் முன்னிறுத்தி உள்ளார்..அதேசமயம், இது அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது..
எஸ்வி சேகரை பொறுத்தவரை வயதிலும் சரி, அரசியல் அனுபவத்திலும் சரி, பெரியவர்.. அப்படி இருக்கும்போது உதயநிதியை சந்திக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லைதான். இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி எஸ்வி சேகர் சென்றது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.. அதேபோல, எவ்வளவுதான் திமுகவை விமர்சித்தாலும், தன்னை நாடி வந்து வாழ்த்து சொன்னதற்கு உதயநிதி மதிப்பளித்த பாங்கு அவர் வளர்ந்த விதத்தை வெளிப்படுத்துகிறது.. தழைக்கட்டும் இந்த அரசியல் நாகரீகம்!