தடுப்பூசி உற்பத்தியை இன்று ஆய்வு செய்கிறார் மோடி.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

 டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் சைடஸ், பாரத் பயோடெக், சீரம் ஆகிய 3 நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்... இதையடுத்து, அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது! 

இன்னமும் உலகத்தையே உருட்டி மிரட்டி கொண்டிருக்கிறது கொரோனா.. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

அதற்கான முயற்சியில் ஏராளமான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்தி உள்ளன.



அந்த தடுப்பூசியை உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி, டெஸ்ட் செய்தும் வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் சேர்ந்து கோவி ஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

இந்த தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது.. மேலும், நம் நாட்டில் 15 நகரங்களில் கோவி ஷீல்ட் தடுப்பூசி பரிசோதனையையும் நடத்தி வருகின்றன. இந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, உலக அளவில் பெரும் அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாகும்.

இதனிடையே, கோவி ஷீல்ட் 3-ம் கட்ட பரிசோதனையை அதிரடியாக வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தடுப்பூசி 80% ஆற்றல் மிக்கவை என்றும், இது மனிதர்களுக்கு செலுத்தும்போது 90% வரை பலனளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தது.. அதுமட்டுமில்லை, இதுவரை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட யாருமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஒரு நிலை வரவில்லை, அவர்களுக்கு நோயும் தீவிரமாகவில்லை என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்திருந்தது.



இப்படிப்பட்ட சூழலில்தான், பிரதமர் மோடி இன்றைய தினம், கோவி ஷீல்ட் தடுப்பூசியின் மேம்பாடு மற்றும் உற்பத்தி, செயல்முறை போன்றவை குறித்து நேரடியாகவே ஆய்வு செய்ய உள்ளார்.. இந்த தகவலை நேற்றே பிரதமர் அலுவலகம் உறுதி செய்திருந்தது.. அந்தவகையில், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப்.இந்தியா ஆகிய 3 இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த போகிறார்.

அப்போது அந்த தடுப்பூசியின் உற்பத்தி, அதன் தயாரிப்பு, பாதுகாப்பு, பக்க விளைவுகள் ஏதாவது ஏற்பட வாய்ப்புள்ளதா போன்ற அனைத்தையும் விஞ்ஞானிகளிடம் கேட்டறிவார் என்று தெரிகிறது.. மேலும், அந்த தடுப்பூசியின் விலை, அதை எப்படி மக்களுக்கு விநியோகிப்பது, தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சவால்கள், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க எடுத்துக்கொள்ளும் காலம், என்பவை பற்றியும் கேட்டறிய போகிறார்.. இந்த இந்த ஆய்வுக்கு பிறகு, சில முக்கிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிடவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.