வங்கக் கடலில் இரு காற்றழுத்தங்கள்.. எங்கே செல்கின்றன?.. சாட்டிலைட் வீடியோவை பாருங்கள்
வங்கக் கடலில் வரும் நவம்பர் 29-ஆம் தேதியும், டிசம்பர் 4-ஆம் தேதியும் இரு வேறு காற்றழுத்தங்கள் உருவாகின்றன என்பதை சாட்டிலைட் புகைப்படங்கள் கூறுகின்றன.

நிவர் புயல் பெருமளவுக்கு சேதத்தை ஏற்படுத்தாமல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்தது. 

இந்த அதி தீவிர புயல் தற்போது புயலாக வலுவிழந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலை கொண்டுள்ளது. அப்படியே ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வரை செல்கிறது.


இதனால் இந்த பகுதிகளில் நல்ல மழை இருக்கும். புயலாகவே திருவண்ணாமலை சென்றுள்ளதால் காற்றின் வேகமும் மணிக்கு 80 கி.மீ. வேகம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.




அது போல் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்தன. மின் கம்பங்களும் முறிந்தன. இவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவர் புயல் இன்னும் சாதாரண காற்றாக கூட கலந்திருக்காது , அதற்குள் வரும் நவம்பர் 29-ஆம் தேதி மற்றொரு காற்றழுத்தம் உருவாகிறது.

தனியார் வானிலை நிலவரங்களின் செயலியில் பார்க்கும் போது வங்கக் கடலில் உருவாகும் அந்த காற்றழுத்தம் அப்படியே தமிழகம் நோக்கி வருகிறது. தமிழகத்தில் வேதாரண்யம், நாகை ஆகிய இடங்களுக்கு சென்று பின்னர் மறைந்து அரபிக் கடலில் மீண்டும் உருவாகிறது.

அது கோழிக்கோடு, கண்ணனூர், மங்களூர் ஆகிய கடல் சார்ந்த பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இந்த காற்றழுத்தம் நிலை கொள்கிறது. பொதுவாக குறைந்த காற்றழுத்த பகுதியாக இருந்தாலே மழையை கொடுக்கும். எனவே இந்த காற்றழுத்தம் மழையை மட்டும் கொடுக்குமா இல்லை, புயலாக உருவெடுக்குமா என்பது இனிதான் தெரியும்.

அது போல் அந்த அழுத்தம் தமிழகத்தின் வேதாரண்யம், நாகையை தொட்டு செல்வதால் நிச்சயம் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் 4-ஆம் தேதி வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே ஒரு காற்றழுத்தம் உருவாகிறது.


பொதுவாக அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தமோ அல்லது புயலோ எந்த திசையை நோக்கி செல்லும் என்பதை உடனடியாக கணிக்க முடியாது. காற்றின் வேகத்தை கொண்டு திசையை மாற்றிக் கொள்ளும். அந்தமானில் ஒரு காற்றழுத்தமோ அல்லது புயலோ உருவானால் அது தமிழகம், ஆந்திரம், ஒரிஸா, மேற்கு வங்கம், வங்கதேசம், மியான்மர், இலங்கை என எங்கு வேண்டுமானாலும் செல்லும். இதனால் அந்தமானில் உருவாகும் காற்றழுத்தத்தின் திசை குறித்து உடனடியாக எந்த தகவலையும் கணிக்க இயலவில்லை.